Published Date: June 27, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகராட்சி அங்கூரான் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ₹2.50 கோடியில் அறிவியல் மையம் கட்டுவதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில்நுட்பவியல் எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சி பினாக்கல் இன்போடெக் சொலியூசன்ஸ் அங்கூரான் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூபாய் 2.50 கோடியில் புதிய சிறைச்சாலை பழைய கரிமேடு மீன் சந்தை அருகே அறிவியல் மையம் அமைப்பதற்கு கடந்த 18.12.2024 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதை அடுத்து அங்கு அறிவியல் மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மேயர் வ.இந்திராணி, ஆணையர் சித்ரா விஜயன் ஆகியோர் தலைமை வகித்தனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இயற்பியல், வேதியல், உயிரியல், கணித பாடங்களை உள்ளடக்கி அமைக்கப்படும் இந்த மையத்தால் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பயன்பெறுவர். அங்குரான் அறிவியல் மையங்களில் வலைப்பின்னல் மூலம் மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தில் ஒரு செழிப்பான உலகளாவிய வாழ்க்கையை உருவாக்குவதற்கு இந்த அறிவியல் மையம் பயனுள்ளதாக அமையும் என்றார் அவர்.
முன்னதாக தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ₹9.95 கோடியில் தத்தனேரி மேலகைலாசபுரம் பகுதியில் நாள் ஒன்றுக்கு 200 மெட்ரிக் டன் திறன் கொண்ட நவீன குப்பை பரிமாற்ற நிலையத்தின் கட்டுமான பணிக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அடிக்கல் நாட்டினர்.
இந்த நிகழ்வில் துணை மேயர் தி. நாகராஜன், மண்டல தலைவர் பாண்டி செல்வி, சரவண புவனேஸ்வரி, கல்வி குழு தலைவர் ராமச்சந்திரன், தலைமை பொறியாளர் பாபு, நகர் நல அலுவலர் இந்திரா, கல்வி அலுவலர் ஜெயசங்கர் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Media: Dinamani